Saturday 13 March 2010

தமிழர்கள் மேற்குப் பக்கம் தலை வைக்கலாமா?


1980களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க சார்பாக மாறத் தொடங்கியது. இலங்கையின் பூகோள நிலை அமெரிக்கக் கடறபடையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ்வலை(ultra low wave) தொலைத் தொடர்புக்கு மிக உகந்ததாக அமைந்துள்ளதால் சிலாபத்தில் அமெரிக்க வானொலி நிலையம் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படையின் தேவைகளை நிறைவேற்ற அமெரிக்காவிற்கு இலங்கை தயாரானது. அத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் என்ற போர்வையில் அமெரிக்கா திருகோணமலையில் தனது கடற்படைக்கு ஒரு எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தையும் அமைக்க முற்பட்டது. இதை அறிந்த இந்திரா காந்தி தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை இந்தியா உருவாககியது. விளைவு அமெரிக்க திட்டத்திற்கு ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பு வைக்கப் பட்டது. இந்த ஒப்பந்தத்தின் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. அதைப் பற்றி இந்தியா கவலைப்படவும் இல்லை.

இப்போது இந்தியாதான் தமிழர்களின் முதலாம் எதிரி என்ற உண்மையை மறைத்து தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்ற பொய்யை தமிழர்கள் மத்தியில் விதைக்க சில சக்திகள் முற்படுகின்றன.

1980களில் இந்தியா தமிழர்கள்மீது காட்டிய அக்கறை போல சில மேற்குலக நாடுகள் தமிழர்கள் மீது இப்போது அக்கறை காட்டுகின்றன. இலங்கை சினாவின் இன்னொரு மியன்மாராக(பர்மா) மாறுவதைப்பற்றியோ அம்பாந்தோட்டை முதல் கச்சதீவு வரை நீண்ட சீன இருப்பைப்பற்றியோ குடும்பநலனில் மட்டும் அக்கறை கொண்ட இந்திய ஆட்சியாளர்களும் அவர்களின் சாதி நலனில் அக்கறை கொண்ட ஆலோசகர்களும் கவலைப் படாமல் இருக்கலாம் ஆனால் மேற்குலக நாடுகள் அக்கறை கொண்டுள்ளன. அதற்கு அவர்கள் கையில் எடுத்த சரத் பொன்சேக்கா இன்னொரு மியன்மாரின் ஆங் சான் சூ கீ(Aung San Suu Kyi) ஆக் மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றார். இலங்கையின் சீனப் பிடிக்கு எதிராக மேற்குலகு தமிழர்களைப் பாவிக்கமுயல்வது தவிர்க்க முடியாததே. இதற்காகத்தான் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்களான தமது நாட்டில் வாழும் தமிழ் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் அவர்கள் இலங்கை அரசின்மீது மனித உரிமை மீறல் குற்றச் சாட்டு போர் குற்றச் சாட்டு போன்றவற்றை முன்வைப்பதுடன் இலங்கைக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. தமது நாடு வாழ் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய மேற்குலக நாடுகள் அவர்களை ஒரு குடைக்குக் கீழ் திரளும்படி வேண்டுகின்றனர். இந்தியாவைப் போல் கேவலமாக பல குழுக்களை உருவாக்கவில்லை. ஆனால் தமிழர்களை ஜனநாயக முறைப்படி செயற்படும்படி வற்புறுத்துகின்றனர். இந்த "ஜனநாயக முறை" தமக்கு வேண்டியவர்களை மேற்குலகு வாழ் தமிழர்களின் தலைமைக்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மேற்குலகு வாழ் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 1980களில் இலங்கை வாழ் தமிழர்கள் விட்ட பிழையை இப்போது மேற்குலகில் வாழும் தமிழர்கள் இன்றுவிடக்கூடாது. தமிழர்கள் இப்போது இருக்கும் நிலையில் பற்றிக் கொள்ள ஏதாவது ஒன்று வேண்டும். அதற்காக எதையும் பற்றலாம் என்று இல்லை. அவர்கள் பற்றிக் கொள்வதைக் கவனமாகப் பாவிக்கவும் வேண்டும். அவர்கள் பற்றிக் கொள்வது அவர்களுக்கு எதிரான ஆயுதமாக மாறாமல் முன்கூட்டியே சிந்தித்து செயற்படவேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...