Thursday 4 March 2010

கூட்டமைப்பு ஆப்பிழுத்துவிட்டதா?


இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தாம் இல்லை என்று இப்போது தமிழ் தேசியக் (தமிழ்க் காங்கிரஸ் மற்றும் பலர்இல்லாத) கூட்டமைப்பின்தலைவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர். இதேவேளை சில ஊடக அறிவாளிகள் தமிழனின் முதலாம் எதிரி இந்தியா என்ற உண்மையை மறைத்து இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லை என்று போதிக்கின்றனர். அத்துடன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒரு துரோகி அல்ல என்றும் வாதிடுகின்றனர். சம்பந்தனை யாரும் துரோகி என்று அழைக்க முன்னரே இவர்கள் சம்பந்தன் துரோகி அல்ல என்று வாதிடுவது ஏன் என்று தெரியவில்லை.
தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படையிலும் விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் 2004-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தமிழத் தேசியக் கூட்டமைப்பு இலகுவாக வெற்றி பெற்றது. ஆனால் எந்த வெளிசக்திகளும் தமிழத் தேசியக் கூட்டமைப்பைக் கண்டு கொள்ளவில்லை. இலங்கையில் இனப் பிரச்சனையை தீர்க்கவென நடந்த சர்வ கட்சி மாநாடுகளுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப் படவில்லை.

முள்ளி வாய்க்காலுக்குப் பின் கூட்டமைப்பின் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழ் மக்களைக் கோரியது தவறு என்று கண்டித்தார். ஆனால் 2010இல் நடந்த தேர்தலுக்கு சம்பந்தன் ஐயா வாக்களித்து எதைச் சாதித்தார் என்று அறியப் பலர் ஆவலாக இருக்கின்றனர்.

ஒரு நல்ல தலைவர் தன் கீழ் உள்ள மக்களை ஒன்று திரட்டுவான் என்பார்கள். ஆகக்குறைந்தது சிலரையாவது ஒன்று திரட்ட வேண்டும். வடக்குக் கிழக்கில் உள்ள 31 தேர்தல் தொகுதிகளில் 1867 வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 60 வேட்பாளர் என்ற விகிதத்தில் போட்டியிடுகின்றனர். நாடாளாவிய ரீதியில் பார்த்தால் 225 தொகுதிகளுக்கு 7250 வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 33 வேட்பாளர்கள் என்ற விகிதத்தில் போட்டியிடுகின்றனர். தமிழர்க்ளைப் பொறுத்தவரை இவ்வளவு தீவிர போட்டி ஏன்? தமிழ் மக்களுக்கு இப்போது நல்ல தலைமை இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தமிழர்கள் மத்தியில் இந்தியத் தலையீடு அதிகரித்து விட்டது என்பது தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளபிளவுகள் எடுத்துக் காட்டுகின்றது. 1980களின் இப்படித்தான் இந்தியா 20இற்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டது.

தமிழ் மக்களுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிலர் மஹிந்த ராஜபக்சே முகாமிற்கு சென்றுவிட்டனர். சிலர் தனிக் குழு அமைத்துவிட்டனர். கூட்டமைப்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. தமக்கு எதிராகச் செயற்பட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களை தோற்கடிக்க ராஜபக்சேக்கள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். திருமலை மாவட்டத்தில் அதற்கான முனைப்புக்களின் படைத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல ராஜபக்சவும் விக்கிரமசிங்கேயும் ஒன்றுபட்டுச் செயற்படும் சாத்தியக் கூறுகள் உண்டு. இவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் கிழக்கில் தமிழர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டிவரும். அது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியீட்டினாலும் ஒன்றுபட்ட ஸ்ரீஇலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. இந்தியாவின் கைக்கூலி ஆயுததாரிகள் இப்போது தமிழ்ப் பகுதிகளில் முகாமிடத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிற்கு வரதராஜப்பெருமாள் என்ற இன்னொரு கைக்கூலியையும் களமிறக்கும் எண்ணம் உண்டு. அவர் காவற்துறை அதிகாரமில்லாத வடமாகாண முதலமைச்சராக பட்டமளிக்கப்படலாம்.
ஆனந்தசங்கரி, பிள்ளையான், கருணா, டக்ளஸ் போன்றவர்களோடு வரதராஜப்பெருமாளும் இணைந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதி என்ன? இந்திய உளவுத்துறையும் அதன் தமிழ் ஊடகக் கைக்கூலிகளும் கூட்டமைப்பையும் வெளிநாடுகளில் வாழ் தமிழர்களையும் பிரிக்கச் சதிசெய்கின்றனர். சென்ற பாராளமன்றத் தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு விலகினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குத் தானே ஆப்பு வைத்ததாகத்தான் முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...