Thursday, 3 December 2009

இலங்கையில் இந்தியாவின் பலமுனைக் காய் நகர்த்தல்கள் பலன் தருமா?


இந்தியா தனது இலங்கை தொடர்பான கொள்கையை என்றுமே சரியாக நிர்ணயித்ததில்லை. இது பலகாலமாக நடந்து வருகிறது. தமிழரசுத் தந்தை செல்வநாயகம் சிறீமாவோ பண்டாரநாயக்கா லால்பகதூர் சாஸ்த்திரியை மிரட்டி சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையை இந்தியாவால் மிரட்ட முடிந்த ஒரு காலகட்டம் இருந்ததென்றால் அது தமிழ் போராளிக் குழுக்கள் பலம் பெற்றிருந்த எழுபதுகளின் பிற்பகுதியும் எண்பதுகளின் முற்பகுதியுமே. பின்னர் இந்தியாவில் ஆட்சிக்கு வலுகட்டாயமாக இழுத்து வரப்பட்ட ராஜீவ் காந்தியும் அவரது ஊழல் நிறைந்த ஆலோசகர்களும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டார்கள். அப்போதைய முக்கிய இந்திய அதிகாரி ஒருவரின் மகளின் திருமணச்செலவை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கொழும்பில் பேசிக் கொள்வர். அவரே இந்திய வெளியுறவுக் கொள்கையை தமிழருக்கு எதிரானதாகவும் சிங்களவர்களுக்கு சாதகமானதாகவும் மாற்றினார். அதற்கு அவர் ராஜீவ் காந்திக்கு காட்டிய பூச்சாண்டி: இலங்கைத் தமிழர்கள் சுதந்திரம் பெற்றால் இந்தியாவில் தமிழ்நாடு தனிநாடாகப் பிரிந்துவிடும். தனது தாயின் செல்வாக்கைப் பாவித்தே அவர் விமான ஓட்டியாகும் தகுதி பெற்றார் என முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயால் விமர்சிக்கப் பட்ட அரசியல் அறிவில்லாத ராஜீவ் கந்தி என்னும் நேரு குடும்பந்துக் குழந்தையும் அந்த பூச்சாண்டிக்குப் பயந்து செயல்பட்டது.

இப்போது இருக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பொதுவாக கேரளத்தைச் சேர்ந்த தமிழ் விரோதிகள். சாதி வெறியர்கள். இவர்களின் தமிழ்விரோதப் போக்கும், தமது சாதிய ஆதிக்க வெறியும், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சேலை அணிந்த முசோலினியின் (உண்மையில் தன் கணவன் கொலையில் என்ன நடந்தது என்று அறியாமல்) பழிவாங்கத் துடிக்கும் மனப்பான்மையும் இணைந்து தமிழர்களை கொன்று குவிக்க சிங்களவர்களுக்கு உதவியது. இவர்கள் இந்தியாவின் பிராந்திய நலனைக் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பின் போது கருத்தில் கொள்ளவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின்போது இந்திய உதவி மிகவும் இலங்கைக்குத் தேவைப் பட்டது. அதனால் இலங்கை தான் இந்தியாவின் ஆதிக்கத்து உட்பட்டு இருப்பது போல் நாடகமாடியது. இதனால் இலங்கையின் போருக்குப் பின் இந்தியா இலங்கையின் மீது தொடர்ந்து தனது பிடியை தக்க வைக்க பலவிதத்தில் முனைகிறது. இலங்கையில் போர் முடிந்து விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப் பட்டபின் நிற்கதியாக்கப் படும் தமிழர்கள் வேறு வழியின்றி:

  • இந்தியாவின் துணையை நாடுவார்கள்.
  • தனது அடிவருடிகளைத் தலைவர்களாக ஏற்பார்கள்.
  • தாம் சொல்வதைக் கேட்பார்கள். என்று கணக்குப் போட்டது இந்தியா.
போர் நடந்து கொண்டிருக்கும் போது நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மின் மூலம் இலண்டனில் உள்ள தமிழர்களிடம் போருக்குப் பின் என்ன செய்வீர்கள் என்று அறிய இந்தியா முற்பட்டது. எதுவும் இந்தியா நினைத்தபடி நடக்கவில்லை. உலகெங்கும் வாழ் தமிழர்களில் பலர் (தமிழ்நாடு உட்பட) பல விதத்திலும் குழம்பி இருந்தாலும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்: தமிழர்களின் முதல் எதிரி இந்தியா. இது இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கழகத்தில் சினாவுடன் இணைந்து இந்தியா சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டதன் மூலம் உறுதியாக்கப் பட்டுவிட்டது. தமிழர்கள் தன் பக்கம் திரும்பாததால் குழம்பிப்போன இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் பல காய்நகர்த்தல்களை மேற் கொள்கின்றது. அதுமட்டுமல்ல சரத் பொன்சேக்காவிற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தவறியது. அதை அமெரிக்கா வழமைபோல் மிகச் சாதுரியமாகப் பயன் படுத்தியது.

சிங்களவரின் இந்திய விரோதத்தை உணராத இந்தியா.
அமெரிக்கா சரத் பொன்சேக்காவைத் தன்வசம் ஆக்கி அவரை ர்ணில் விக்கிரமசிங்கவுடன் இணைக்க இந்தியா ரணிலை டெல்லிக்கு அழைத்து தன் வசமாக்க முற்பட்டது. அமெரிக்காவா இந்தியாவா என்ற கேள்வி வரும்போது சிங்களவர்கள் அமெரிக்காவைத்தான் தெரிவு செய்வார்கள் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் என்றுதான் உணர்வார்களோ? ரணில்-சரத் கூட்டணியில் ஜனதா விமுக்திப் பெரமுனையை இணைய விடாமல் தடுக்க இந்தியா திரை மறைவில் முயன்றது. இதை அறிந்த ஜனதா விமுக்திப் பெரமுனையான சீன ஆதரவுக் கட்சி சரத்-ரணில் கூட்டணி இந்தியாவிற்கு எதிரானது என உணர்ந்து நிபந்தனை இன்றி அக்கூட்டணியில் இணைந்து இந்தியாவின் முகத்தில் கரி பூசியது. சிங்களவர்களின் இந்திய விரோதப் போக்கை என்றுதான இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்களோ?

சூரிச் மாநாடு.
சிங்களவர்களால் கைவிடப் பட்ட இந்தியா தமிழ் அரசியல் கட்சிகளை சுவிற்சலாந்துக்கு அழைத்து சூரிச் நகரில் ஒரு மாநாடு நடாத்தி தமிழர்களைத் தன் பக்கம் திரட்டி அதன் மூலம் இலங்கையில் தனது பிடியைச் சற்று செலுத்தலாம் என்று கணக்கும் போட்டது இந்தியா. அதுவும் படு தோல்வியில் முடிவடைந்தது. பல முதிய தமிழர்களின் அடிமனதில் ரணிலின் யூஎன்பி கட்சியில் ஒரு விருப்பு உள்ளது. இது பல வலது சாரித் தமிழ்த் தலைவர்களாலும் ஊடகங்களாலும் ஏற்படுத்தப் பட்டது. இத்தமிழர்களின் வாக்கு ரணில்-சரத் கூட்டணிக்குப் போகாமல் இருக்க இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு குடியரசுத் தலைவருக்கு போட்டியிடும் படி இந்தியா கட்டளையிட்டுள்ளதாக கூறப் படுகிறது. ஏற்கனவே இடது சாரித் தமிழர்களின் வாக்கை தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆதரவாளரான கலாநிதி கருணாரட்ண பிரிக்கப் போகிறார். இந்தியாவால் ஒன்றை மட்டும் செய்ய முடிந்தது: மலையகத் தமிழர்களை ராஜபக்சேயிற்குஆதரவாக்கியது.

தமிழ்நெற் இந்தியாவை எதிர்க்கிறது.
தமிழ்நெற்றின்(www.tamilnet.com) ஆசிரிய பீடம் இன்று வெளியிட்ட கருத்து இந்தியாவின் கட்டளைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் களத்தில் இறங்கக் கூடாது என்று பொருள்பட இருக்கிறது. அது மட்டுமல்ல கலாநிதி விக்கிரமரட்ணவிற்கு வாக்களித்து மற்றவர்கள் முகத்தில் அடிக்கவும் கூறப் பட்டுள்ளது தமிழ்நெற்றின் கருத்தில். கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தவர். இதனால் சிங்களவரான இவரை பிரபாகரனின் சித்தப்பா என்று சிங்கள ஊடகங்கள் வர்ணித்தன.

மீண்டும் இந்தியா ஏமாறும்
தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றாலும் அவர் இந்திய விரோதியாகவே செயற்படுவார். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் ஏற்கனவே மஹிந்தவின் வெற்றிக்காக யாகங்கள ஆரம்பித்து விட்டனவாம்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...