Tuesday 10 November 2009

ரணில் போடும் நிபந்தனைகள் பற்றி ஒரு பார்வை


இலங்கை அரசியலுக்கு அவரது மாமனார் ஜே ஆர் ஜயவர்தனேயால் அறிமுகம் செய்யப் பட்டவர் ரணில் விக்கிரமசிங்க. இவர்தான் இலங்கையில் பிரதான அரசியல் கட்சியான யுஎன்பி (UNP)எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். இவர் தலைமையில் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி எதனையும் சாதிக்கவில்லை. UNP ஐ அதன் குடும்ப ஆதிக்கங்களுக்காக Uncle Nephew Party என்று மற்றக் கட்சிகளால் கிண்டல் செய்யப்படுவது உண்டு. சிலர் சிங்களத்தில் ஒவுன்கே நாதாகே பக்சய - உங்கள் உறவினர்களின் கட்சி என்றும் கிண்டல் அடிப்பர்.

இப்போது போரில் வெற்றியடைந்த(?) ராஜபக்சே குடும்பம் சிங்கள் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்குப் பெற்றிருப்பதாக கூறப் படுகிறது. இதனால் பாராளமன்றத் தேர்தல் குடியரசுத் தலைவர் தேர்தலை உடன் நடத்த ராஜபக்சே குடும்பம் தீர்மானித்தது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே எதிர்த்து ரணில் போட்டியிட்டால் அவர் தோல்வி அடைவது நிச்சய்ம்.

போர் வெற்றி மமதையும் சீன ஆதரவும் இலங்கையை ஆளும் ராஜபக்சே குடும்பத்தை மற்ற நாடுகளினது சொற் கேட்காமல் நடத்தத் தூண்டியது. இதனால் டெல்லிக்கும் வஷிங்டனுக்கும் ரணில் ஒரு செல்லப் பிள்ளையானார். ராஜபக்சேயின் பெரும் சொத்து போர் வெற்றி. அதில் பெரும் பங்கு சரத் பொன்சேகா என்னும் படைத்தலைவர்ருக்கு உரியது என்று பலரும் கருதுகிறார்கள். இதை விரும்பாத ராஜபக்சே குடும்பம் சரத் பொன்சேக்காவை ஓரம் கட்டத் தொடங்கியது. அதன் உச்சக் கட்டமாக அண்மையில் நடந்த இலன்கைப் படைகளின் 60-ம் ஆண்டு விழாவில் சரத் பொன்சேக்கா ஆற்றிய உரையை அரச ஊடகங்கள் முற்றாக இருட்டடிப்புச் செய்தன. அதிருப்தி அடைந்தார் சரத் பொன்சேக்கா.

அமெரிக்க மாமா சரத் பொன்சேக்காவின் அதிருப்தியைச் சாதகமாக்க எண்ணினார். சரத்-ரணில் கூட்டணியை உருவாக்கினார். இப்போது சரத் பொன்சேக்கா எதிர்க் கட்சிகளின் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் படுவாதாகத் தகவல்கள் வருகின்றன. இது ரணிலைச் சற்று சிந்திக்க வைத்திருக்கிறது. ரணிலுக்கு முன்னால் நல்ல உதாரணம் இருக்கிறது. அதுதான் சந்திரிகா பண்டாரநாயக்கா. அவரது குடும்பச் சொத்தாக சிறிலாங்கா சுதந்திரக் கட்சியை அவர் கருதினார். இரு முறை குடியரசுத் தலைவராக இருந்தவர் சந்திரிக்கா. இலங்கையின் அரசியல் அமைப்புப்படி எவரும் மூன்றாவது முறையாக குடியரசுத் தலைவை பதவிக்குப் போட்டியிட முடியாது என்பதால் மூன்றாம் முறை மஹிந்த ராஜபக்சேயை தனது கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடையச் செய்தார். ஆனால் மஹிந்த சந்திரிக்காவை முற்று முழுதாக அரசியல் செல்லாக் காசு ஆக்கிவிட்டார். இதே கதி தனக்கும் ஏற்படக் கூடாது என்பது ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்காவை எதிர்க் கட்சிகளின் கூட்டணிசார்பில் நிறுத்த அவர் சில நிபந்தனைகளை விதிக்கிறார்:
  • தொலையடா குடியரசுத் தலைமையை: சரத் பொன்சேக்கா குடியரசுத் தலைவராகப் போட்டியிட்டு வென்ற பின் குடியரசுத் தலைவர் முறைமையை நாட்டில் இருந்து ஒழித்துக் கட்டவேண்டும். ( சரத் தனக்கு தானே குழிபறிக்க வேண்டும். எந்த மடையன் இதற்கு ஒத்துக் கொள்வான்? பிறகு சரத் பொன்சேக்கா யார்?)
  • காபந்து அரசாங்கம்: சரத் பொன்சேக்கா குடியரசுத் தலைவராகப் போட்டியிட்டு வென்ற பின் ஒரு காபந்து அரசு அமைத்து அதற்கு பிரதம மந்திரியாக ரனில் விக்கிரம சிங்கவை நியமிக்க வேண்டும்.
  • தமிழர் பிரச்சனைத் தீர்வு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுத்து தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப் படவேண்டும். ஏற்கனவே கருணாவிற்கு மந்திரிப்பதவி கொடுத்தாகி விட்டது. தமிழர் பிரச்சனை தீர்ந்ததா? மந்திரிப் பதவியால் பிரச்சனை தீர்ந்து விடக்கூடிய பிரச்சனையா தமிழர் பிரச்சனை. ரணில் சாதுரியமாக சிங்கள மக்கள் கெட்ட வார்த்தை எனக் கருதும் "அதிகாரப் பரவலாக்கல்" என்பதைப் பற்றியே குறிப்பிடவில்லை. எவன் சொன்னான் தமிழர் பிரச்சனைக்கு அதிகாரப் பரவலாக்கல்தான் தீர்வு என்று?
  • ஜேவிபி இற்கு மந்திரிப் பதவிகள். தம்மைக் கம்யூனிஸ்ட்டுக்கள் என்று கூறும் தீவிர பேரினவாதக் கட்சியான ஜனதா விமுக்திப் பெரமுனைக்கு சரத் பொன்சேக்கா மந்திரிப்பதவிகள் கொடுப்பதாக் முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமாம். ஜேவிபீ தாம் பதவிக்காக ஓடும் கட்சி அல்ல என்கிறார்களே. அந்த தியாகிகளுக்கு ஏன் பதவிகள்?
  • 17-ம் திருத்தம்: இலங்கை அரசியல் அமைப்பிற்கான 17வது திருத்தத்தை அமூல் படுத்த வேண்டும். இதன்படி அரசியல் அமைப்புச் சபை உருவாக்கி அச்சபை பிரதம நீதி அரசர், தேர்தல் ஆணையாளர், சட்டமா அதிபர், காவற்துறை மாஅதிபர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்யும். பிறகு யார் நாட்டை நடத்துவது?
சரத் பொன்சேக்கா தான் போரில் அடைந்த வெற்றிக்கு உரிய சன்மானத்தைப் பெற ராஜபக்சே குடும்பம் அனுமதிக்க வில்லை என்று இப்போது குறைபடுகிறார். இனி தேர்தலை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வென்று கொடுத்து விட்டு அவர் வெளியேறி விட வேண்டும்.

வென்று கொடுத்து விட்டு விலகுவது தான் சரத் பொன்சேக்காவின் வேலையா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...