Sunday, 23 August 2009

அமெரிக்கா தமிழர்கள் மீது காட்டும் திடீர் கரிசனை எதற்காக?

.
.
.
உலகளாவிய அமெரிக்கத் தளங்களைப் பொறுத்தவரை இந்து சமூத்திரத்தில் உள்ள இடை வெளியை நிரப்ப அமெரிக்காவிற்கு இலங்கை உகந்த இடமா?

.

எதிர்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் காட்டும் கரிசனையில் தான் அவர்களுக்கான உதவிகள் நிர்ணயிக்கப்படும்.
சிறீலங்காவில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சரியான அதிகாரப் பகிர்வு வழங்கப்படாவிட்டால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும், இதனை ஓர் அச்சுறுத்தலாக விடுக்கவில்லை.
அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும், சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான றொபேர்ட் ஓ பிளேக் அவர்களே மேற்கூறிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்?

அதுமட்டுமல்ல றொபேர்ட் ஓ பிளேக் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நாடாத்தியதுடன் நிற்காமல் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தீர்க்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களும் அறியப் படவேண்டும் என்றார்.

இவற்றைக் கேட்ட இலங்கை அரசு சும்மா இருக்கவில்லை அமெரிக்காவில் உள்ள தனது தூதுவர் மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் இலங்கைக்கு உதவிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்கா தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டுவது ஏன்?

அமெரிக்கா நியாயப் படி தமிழர் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்ற உண்மைய உணர்ந்து அதை வலியுறுத்துகிறதா? இருக்காது! அமெரிக்காவைப் பொறுத்தவரை சர்வதேசிய அரசியலில் நியாயம் நீதி என்ற பேச்சுக்கு இடமில்லை.

அமெரிக்கா தமிழர்களை தன்பக்கம் இழுக்க முயல்கிறதா? இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த நிலையில் அமெரிக்காவும் ஜப்பானும் விடுதலைப் புலிகளைத் தம் பக்கம் இழுக்க முயன்றனராம். அவர்கள் ஈழத்திற்கு கேட்ட விலை திருக்கோணாமலையும் காங்கேசந்துறையுமாம். ஆனால் விடுதலைப் புலிகளின் இந்திய விசுவாசம் இதற்கு இடம் கொடுக்கவில்லை. அமெரிக்கா இப்போது மறுபடி அதற்கு முயற்ச்சிக்கிறதா?

வன்னி முகாம்களில் இருக்கும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கை எந்த நாடுகளினதோ அல்லது அமைப்புக்களினதோ வேண்டுதல்களை நிராகரித்து அடாவடித்தனமாக நிற்பதற்கு இலங்கைக்கு பின்னால் சீனா இருப்பது தான் காரணமாக இருக்க வேண்டும். சீனா இலங்கையை சர்வதேச ரீதியில் மியன்மாரைப்(பர்மா) போல் தனிமைப் படுத்தி தன்வசமாக்கும் முயற்ச்சியில் ஈடு பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. இதை உறுதி செய்யுமாற் போல் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் அபிவிருத்தியில் சீனா முக்கிய பங்காளன் என்று குறிப்பிட்டுள்ளார். சீனப் பிடியில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கு அல்லது சீன நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கையை விலக்குவதற்கு அமெரிக்காவிற்கு தமிழர்கள் தேவைப் படுகிறனரா?

உலகளாவிய அமெரிக்கத் தளங்களைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் உள்ள அமெரிக்கத் தள இடை வெளியை நிரப்ப இலங்கை உகந்த இடம். அதனால் தமிழர்கள் மீது அமெரிக்கவிற்கு அக்கறையா?

தமிழர்கள் இப்போது நிற்கதியாக நிற்கிறார்கள் என்று அமெரிக்கா நினைக்கிறதா? அதனால் அவர்களைத் தன் பக்கம் இழுத்துப் போட்டுவிடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறதா?

தமிழர்களின் ஆயுத போராட்டம் இனிவருங் காலங்களில் வீறு கொண்டு எழும் அதை தடுத்து தன் வழிப்படுத்த அமெரிக்கா சதி செய்கிறதா?
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...