Tuesday, 7 July 2009

தமிழ்த் தேசிய வாதம் அடக்கப் பட்டு விட்டதா?


தமிழர்களின் ஈழக் கனவை இருபது நாடுகளின் உதவியுடன் அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டி விழாக் கொண்டாடியது.
.
தமிழினக் காவலர்கள் என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் இனி இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் தயவில்தான் வாழவேண்டும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் தாம் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் தயவில்தான் வாழ முடியும் என்று முடிவு செய்து பல காலங்கள் ஆகி விட்டன.
.
தமிழ்த்தேசியவாதிகள் போல் ஈழத்து ஆயுத போராட்டதுக்குள் தம்மை நுழைத்துக் கொண்டு பின் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் மிரட்டலுக்கு அடி பணிந்து தமிழ்த்தேசிய எதிர்ப் பாளர்களாக மாறி தமக்கு என ஒரு கொள்கை இல்லாமல் இலங்கையிட் ஆட்சி பீடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு அடிவருடிகளாக மாறி தமிழ்த்தேசிய வாதத்தை ஒடுக்க சகல உதவிகளும் புரிந்தவர்கள் புலிப் பாசிசம் தேற்றது என்று சொல்லி மார்தட்டிக் கொள்கின்றார்கள்.
.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறி தமிழ்த் தேசிய வாதத்தை ஆரம்பித்து வைத்த ஜி. ஜி பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய வாதம் முடிந்து விடவில்லை. அதன் பின் தந்தை செல்வா தலைமையில் இன்னும் வீறு கொண்டுதான் நின்றது. அவருடனும் அது முடியவில்லை. அவருக்குப் பிறகு வந்தவர்கள் தமது தீவிரத்தை கூட்டாமல் குறைக்க முற்பட்டபோது. தமிழ்த் தேசியத்தின் தலைமை அவர்களை விட்டு ஆயுதப் போராளிகளின் கைகளுக்குச் சென்று விட்டது.
.
இன்று தமிழ்த் தேசியவாதம் பலவீனப் பட்டு விட்டது தமிழ்ர்கள் ஏதோ கொடுக்கிறதை வாங்கிக்கொள்ள வேண்டியது தான் என்ற கதை பலமாக அடிபடுகின்றது. ஆறு மாதத்திற்கு முன்னர் இல்லாத இந்த நிலைப் பாடு இன்று எழுந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? இதற்கு முன்பு இருந்த ஒன்று இப்போது இல்லை. அது என்ன என்ற கேள்விக்கு விடை தேடினால் தமிழ்த்தேசிய வாதத்தைப் பாதுகாத்தவர்கள் யார் என்று புரியும்.
.
தமிழ்த்தேசிய வாதம் 1970 களின் ஆரம்பத்தில் இருந்து வீறு கொண்டு எழ எழ அதற்கு எதிரான அடக்கு முறைகளும் மனித நியமங்களுக்கும் பன்னாட்டு நியமங்களுக்கும் முரணாக அநியாய வடிவம் பெற்றன. இந்த அநியாயத்திற்கு எதிரான தமிழ்த்தேசிய வாதத்தின் நடவடிக்கைகளின்மீது இலகுவாக பயங்கரவாத மென்ற முத்திரை குத்தப் பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய வாதத்தின் நியாயத்தன்மை புறக்கணிக்கப் பட்டது. அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியவாதத்தின் வளர்ச்சி தமக்கு ஆபத்தானதாக பல நாடுகளும் எண்ணிக் கொண்டன. ஆயுதப் புரட்சி மூலம் எவரையும் அதிகாரத்திற்கு வர அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப் பாட்டையும் எடுத்துக் கொண்டன. இவற்றின் விளைவாக தமிழ்த்தேசிய வாதத்தின் ஆயுத பலம் வெற்றீகரமாக மழுங்கடிக்கப் பட்டது.
.
தமிழ்த்தேசிய வாதத்தின் நியாயத் தன்மை இன்றும் உறுதியாகத்தான் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தின் எதிரிகளின் கொடூரத் தன்மை மேலும் தீவிரமடைந்து நிற்கிறது. இந்நிலையில் தமிழ்த்தேசிய வாதம் அடக்கப் பட்டு விட்டதா? படுமோசமான அடக்கு முறைகளைக் கொண்ட வன்னி இடைத் தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களுக்கு உள்ளேயே சுவரொட்டிப் போராட்டம் தொடங்கி விட்டது. திவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துள் கரும்புலிகள் தினத்தன்று பூமாலை போடப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய வாதம் அடங்க மறுக்கிறது.
அது புது வடிவம் தேடி நிற்கிறது.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...