Friday 12 June 2009

இந்தியா தலையிட முடியாமையால் வகுத்த தலையிடாக் கொள்கை தலையிடிக் கொள்கையாகியது.


இலங்கையில் இந்தியாவால் தலையிட முடியாத நிலை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவி வருகிறது. தலையிட்ட தெல்லாம் பாக்கிஸ்த்தான் அல்லது சீனா தலையிடாமல் தடுக்கவே இந்தியா இலங்கையின் அனுமதியுடன் அவ்வப்போது இந்தியா தலையிட்டு வந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில் சீன சார்புப் பொதுவுடமை வாதிகள் வட கொரிய ஆதரவுடன் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டபோது இந்தியப் படைகள் வந்து அப் புரட்சியை அடக்கியது. இந்த ஆயுதப் புரட்சிக்கு சீனா ஆதரவு அளிக்கவில்லை. இலங்கையில் பொதுஉடமைவாத ஆயுதப் புரட்சிக்கு உரிய சூழ்நிலை இல்லை என எஸ். சண்முகதாசன் அவர்கள் சீனாவிற்கு தெரிவித்தமையும் இலங்கையுடன் நல்ல நட்புறவை தொடரந்து பேண சீனா விரும்பியமையுமே இதற்கான காரணங்கள்.
.
1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார். அப்போதும் கணிசமான அழுத்தத்தை இலங்கைமீது பிரயோகிக்க பெரிதும் சிரமப்பட்டார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.
..
ஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது
.
இந்தியாவின் இலங்கைமீதான பிடி இந்தியப் படை இலங்கையில் இருக்கும் வரை தொடரும் என உணர்ந்த சீனாவும் அமெரிக்காவும் இந்தியப் படைகளை வெளியேற்றும் படி ஜனதா விமுக்திப் பெரமுனையை இலங்கை அரசிற்கு எதிராக தீவிர கிளர்ச்சியில் ஈடுபட வைத்தன. இலங்கையில் பெரும் அரசியல் நெருக்கடி இதனால் 1987-1988 இல் ஏற்பட்டது. பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். பிரேமதாச இந்தியப் படைகளை வெளியேறும் படி வற்புறுத்தினார். இந்தியா தனது ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள் மூலம் பிரேமதாச அரசைக் கவிழ்கக எடுத்த முயற்சி பலத்த தோல்வியைச் சந்தித்தது. பிரேமதாசா இந்தியாவுடன் போர் புரிய புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததாகவும் பலர் நம்பினர்.
.
விடுதலைப் புலிகள் மீண்டும் வளர்ச்சியைக் கண்டனர். இலங்கை இந்தியாவுடன் நட்புபோல் நடித்துக் கொண்டு சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் அமெரிக்காவுடனும் தனது நட்பைப் பேணிவந்தது. விடுதலைப் புலிகளின் பாரிய வளர்ச்சி இந்தியாவை அதிர வைத்தது. இந்தியா நீண்டகாலத் திட்டமொன்றைத் தீட்டியது. இலங்கைப் படையினருக்குப் பயிற்ச்சி ஆயுத உதவி உளவுத் தகவல் விடுதலைப் புலிகளைப் பிரித்தல் எனப் பலவற்றை செய்து கொண்டிருக்க சீனா அம்பாந்தோடடையைத் தனக்குப் பெற்றுக்கொண்டது.
.
இலங்கையின் தயவில் இந்தியா
இப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப் பட்டுவிட்டதாக இலங்கை அறிவித்தது. இந்தியாவிற்கு என்று பிடியில்லை. இதை அண்மையில் சிவசங்கர மேனன் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த வேளையில் சொல்லிய கருத்துக் களிலிருந்து தெரிகிறது. இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சொன்னது ஒரு வகையில் சரிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவ்சங்கர் மேனன் கூறினார். இந்தியா எந்த அழுத்தத்தயும் இலங்கைக்கு கொடுக்கவில்லை எனறார். உண்மையில் கொடுக்க முடியாத நிலையில் தான் அவரது இந்தியா இருக்கிறது. இலங்கைதான் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இலங்கையின் அழுத்தத்தால் தான் இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்கவிருந்தது இரத்துச் செய்யப் பட்டது.
.
மெல்ல மெல்ல உறுதியாக வளரும் சீன ஆதிக்கம்.
சீனா இலங்கைக்கு வழங்கிய காதுவிகள் (ராடார்கள்) தென்னிந்தியாவை வேவுபார்கக் கூடியவை. இலங்கை புதிதாக வரைந்து கொண்டிருக்கும் கரையோரப் பாதுகாப்புத் திட்டம் இந்தியக் கடற்படைக்கு சீனா வைக்கும் ஆப்பு. இலங்கை தனது கடல் எல்லையை விரிவாக்கும் எண்ணமும் உண்டு. இத்திட்டத்தில் இலங்கை கச்ச தீவில் உயரிய கண்காணிப்புக் கோபுரத்தையும் அமைக்க விருக்கிறது. யார் எதைக் கண்காணிக்கப் போகிறார்கள்? இப்போதைய நிலையில் இந்தியாவின் வெறுப்பைச் சாதிக்க இலங்கக விரும்பாது. சில இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் சில்லறை முதலீடுகளைச் செய்ய இலங்கை அனுமதிப்பதன் மூலம் தான் இந்தியாவின் நண்பன் எனப் பாசாங்கு செய்து கொள்ளும். இதற்காக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்திய வர்த்தகர்கள் இலங்ககயில் திறக்க அனுமதி வழங்கப்படும். மற்றும் படி சீனவின் விரிவாக்கத் திட்டம் இலங்கையில் முறையாக அரங்கேறும். இலங்கை இந்தியாவிற்கு தொடர்ந்தும் தலையிடியாகவே அமையும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...