Monday 8 June 2009

தமிழர் பிரச்சனை - துருப்புச் சீட்டு சீனாவின் கையில்!


இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இப்போது இலங்கை இராணுவம் ஒரு உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன: "இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை 1983இல் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பலத்த ஆளணி இழப்புக்களுக்கு மத்தியில் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டிக்காத்து வந்தவர்கள் இலங்கை ஆயுதப் படையினர். 1956இல் S. W. R. D பண்டாரநாயக்கா தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வை முன் வைத்தபோது அதை எதிர்த்து அவர் S. J. V. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்தமையால் இலங்கையில் இனப் பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து நாடு பிரிவடையும் அச்சத்திற்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான சிங்கள் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்து அவயங்களை இழந்து இலங்கை பிரிவடைவதைத் தவித்தனர். ஆதலால் இனி அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம் ஆனால் தமிழருக்கு உரிமை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒன்று நடக்குமானால் நாம் ஆட்சி அதிகாரத்தை நம் கையில் எடுப்போம்."
இலங்கை இராணுவம் பல தோல்விகளைச் சந்தித்த போதெல்லாம் அதனை சில பத்திரிகைகள் எள்ளி நகையாடியபோது அதன் பின் நின்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்கள் யார்? சிங்களப் பேரின வாதிகள். இவர்கள் பேச்சைத்தான் இலங்கை இராணுவம் இப்போது கேட்கும். இவர்களின் கூற்றுப் படிதான் இனி இலங்கை இராணுவம் கேட்கும். இவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் இலங்கை இராணுவம் மேற்படி முடிவை எடுத்தது. சிங்களப் பேரின வாதிகளின் அமைப்பிற்கு இலங்கை அதிபரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே தலைவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் எல்.ஜெயசூர்ய என்பவரால் இலங்கை இராணுவத்தின் இணயத் தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது:
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

இந்த தைரியம் இந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு எங்கிருந்து வந்தது? இவர்களின் பின்னணியில் சீனா இருப்பதால் தான் இந்தத் தைரியம் வந்தது.
விடுதலைப் புலிகளின் பலமிழக்கச் செய்யப் பட்ட பின்னர் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் ஆழமாகவும் அகலமாகவும் ஊன்றப் பட்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை சீனா உறுதியான நம்பகமான நண்பன். இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்பைப் பேணிவரும் ஒரே ஒரு நாடு சீனா. சீனா சொல்வதைத்தான் இந்த சிங்களப் பேரினவாதிகள் கேட்பார்கள். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வுக்கு முடிவெடுக்க வல்ல ஒரு நாடாக இப்போது சீனா மாறியுள்ளது.
கடந்த 20 வருடங்களாக சர்வதேச அரங்கில் இராணுவ பொருளாதார ரீதியில் மாபெரும் சக்தியாக சீனா மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய அந்நியச் செலவாணியையும் மிக அதிக மக்கள் தொகையையும் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தையும் கொண்ட நாடான சீனா தனது நட்பு நாடும் பிராந்திய நலனுக்கு முக்கிய நடுமாகியா இலங்கையில் தனது நலனை ஒட்டியே காய்களை நகர்த்தும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...