Saturday 13 December 2008

Temples in Britain













விம்பிள்டன் கோயில் வேழம் - நிதம்
வேண்டி னோர்க் கருள் ஞானம் - அவர்
அன்புக்கொரு தம்பிக்கொரு
நம்பிக்குற மாதைத்தரு
தும்பிக்கை – வை
நம்பிக்கை.

வேல்ஸில் விளையாடும் வேலன் - அவன்
வேண்டிச் செல்வோர்க் கருள் பாலன்
இசையோடும் எழிலோடும் மயிலாடும்
குயில் கூவும்
தோட்டம் - எங்கள்
தேட்டம்.

ஆச்வேயில் ஆடும் அழகன் - எங்கள்
உயர் வாசற் குன்றுக் குமரன் - அவன்
பண்ணொடும் பதத்தொடும்
பெண்ணோடும் நிதமாடும்
ஆட்டம் - பக்தர்
கூட்டம்.

ஈசன் மகனுக் கொரு ஈஸ்ற்ஹாம் - அது
ஈடில்லாப் புகழ் சேர் கொற்றம் - அது
மானொடும் மயிலாடும்
தேரொடும் எழில்கூடும்
தோட்டம் - கந்த
கோட்டம்.

ராஜராஜேஸ்வரி தோற்றம் - அது
ஸ்ரோன்லிக்கொரு ஏற்றம் - அந்த
ஈஸ்வரன் இணைதேவி
ஈடில்லாத் துணைதேடி
வருவார் கோடி – பல
பாடல் பாடி.

ஈலிங்கில் கனக துர்கை – என்றும்
வேண்டுவோரக் கருள் பொற்கை - அந்த
மகுடன் வதை அம்மன் கதை
நம்பியுளம் கொள்வேர்
துயர் தீர்ப்பாள் - அருள்
சேர்ப்பாள்.

ஈசனார்க் கொரு கோயில் - அது
இயைந்தது லுவிசியம் தன்னில் - அந்தப்
பொடி பூசி மதி சூடி
நதி சூடி சதி பாதிச்
சர்வேசன் - எங்கள்
தவநேசன்.

ரூட்டிங்கில் முத்து மாரி – அன்பைத்
தருவாள் அள்ளி வாரி
முதலும் அவள் முடிவும் அவள்
அருளும் அவள் பொருளும் அவள்
சிவ சக்தி – தருவாள்
நன் முத்தி.

மஹாலக்ஷ்மி மனமகிழ் மன்றம் - அது
மட்டில்லா மகிமை சேர் ஈஸ்ற்ஹாம் - அங்கு
சொத்தைத்தரு அத்தைக்கொரு
அன்பின்னுரு அடியார்தரு
காணிக்கை – நிதம்
சேருங்கை.

என்பீல்ட் நகர் எழுந்தருளி - நிதம்
எமக்கருள்வாள் நாகபூசணி – எங்கள்
தாயகத் துயர் துடை தாயவள்
உயர் பத
மென்றும் நாடு - அங்கு
தோன்றும் நாடு.

மிச்சப்பதி அமர் சுந்தரேசர் - எங்கள்
மீனாட்சி மனங்கவர் எழில்நேசர்
கிளி கொண்ட துணை சேர்ந்த
நஞ்சுண்ட நீலகண்ட
நடராசர் - நற்
பக்தநேசர்.

எத்தெய்வமானாலு மென்ன - இங்கு
எத்தலமானாலு மென்ன – எனறும்
அன்பைக் கொடு அருளைப் பெறு
அகந்தை விடு அறிவில்
எடு தூய்மை – வாயில்
வாய்மை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...